menu Home
Spirituality

விழுப்புரம் ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம் | Villupuram; Brahmotsava Chariot Procession held at Sri Vaikundavasa Perumal Temple

Bhakti Teacher | June 11, 2025


விழுப்புரம்: விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் இன்று (ஜூன் 11) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் விழா கடந்த 3-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், திருப்பல்லக்கு, இந்திர விமானம், குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதற்கிடையில், கடந்த 9-ம் தேதி இரவு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, திருத் தேரோட்டம் இன்று (ஜூன் 11) காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப் பட்ட திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் அருள்பாலித்தார்.

அதன்பிறகு, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் புறப்பட்டது. ‘ஓம் நமோ நாராயணா, கோவிந்தா கோவிந்தா’ என முழக்கமிட்டு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காமராஜர் தெருவில் தொடங்கிய தேரோட்டம் மேல வீதி, வடக்கு தெரு, திருவிக வீதி என மாட வீதிகள் வழியாக கோயில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாளுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.