menu Home
Spirituality

விழாக்கோலம் பூண்டுள்ள திருப்பரங்குன்றம் – 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்! | Kumbabhishekam after 14 years Thiruparankundram in murugan temple

Bhakti Teacher | July 12, 2025


மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயி்லில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 14-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. தற்போது யாகசாலை பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் அலை அலையாக வரும் மக்களின் வருகையால் திருப்பரங்குன்றம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14-ம் தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. முன்னதாக ரூ.2.44 கோடியில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக உபயதாரர் மூலம் ரூ.70 லட்சத்தில் 125 அடி உயரமுள்ள ஏழு நிலை ராஜகோபுரத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கும்பாபிஷேக முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். 3 லட்சம் பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் மனம் மகிழும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட, மாநகராட்சி, கோயில் நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய

சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த

திரளான பக்தர்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக நடத்தப்படும் யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால் கடந்த 2 நாட்களாக கோயிலுக்கு பக்தர்களின வருகை அதிகரித்துள்ளது. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகின்றனர். வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். கும்பாபிஷேக விழாவால் திருப்பரங்குன்றம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கோயில் கோபுரங்கள், முகப்பு பகுதிகள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கின்றன. ராஜகோபுரத்தில் புதிதாக ‘வேல்’ மின் அலங்காரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றியுள்ள கடைகள், வியாபார நிறுவனத்தினரும் மின் அலங் காரம் செய்துள்ளனர். இதனால், அந்த பகுதி முழுவதுமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் யானை புத்துணர்வு முகாமுக்கு சென்றுள்ளது. இதனால் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திலிருந்து ஒரு கோயில் யானை வரவழைக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி தலைமையில் கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன், அறங்காவலர்கள் மணிச்செல்வன், சண்முகசுந்தரம், பொம்ம தேவன், ராமையா மற்றும் கோயில் பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.

மின் விளக்கு அலங்காரத்தில் முருகன்.

14 மணி நேரம் மூலவரை தரிசிக்க சிறப்பு வசதி: கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா கூறுகையில், ‘‘ பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழி நெடுகிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடமாடும் கழிப்பிட வசதி, பெண்களுக்கென பிரத்யேக கழிப்பிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தேவையான அளவுக்கு செய்யப்பட்டுள்ளன.

ப.சத்யபிரியா

காலை முதலே பல ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. காலை 7 மணி முதல் தொடர்ந்து 14 மணி நேரம் வரை மூலவரை தரிசனம் செய்யலாம். கட்டண தரிசனத்தை முழுமையாக தவிர்க்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. உபயதாரர்கள் மட்டுமின்றி, ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாத பை வழங்கப்படும். மாவட்டம் முழுவதிலும் முக்கிய ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’ என்றார்.