menu Home
Spirituality

ராமானுஜரின் 1008-வது அவதார ஜெயந்தி: சேலம் மணிமண்டபத்தில் சிறப்பு பூஜை | Ramanuja’s 1008th incarnation anniversary celebrated in Salem

BhaktiSongsAdmin | May 6, 2025


சேலம்: ராமானுஜரின் 1008-வது அவதார ஜெயந்தி உற்சவத்தையொட்டி, சேலத்தில் உள்ள ஸ்ரீராமானுஜர் மணிமண்டபத்தில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமானுஜரின் 1008-வது திருநட்சத்திர அவதார ஜெயந்தி உற்சவம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சேலம் எருமாபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபத்தில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனையொட்டி, மணிமண்டப வளாகத்தில் காலை 7 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, விஸ்வரூப சேவை, திருவாராதனம் ஆகியவை தொடங்கி நடைபெற்றன.

பின்னர், 18 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ராமானுஜரின் பிரம்மாண்டமான திருவுருவச்சிலையின் முன்பாக, ஸ்ரீ ராமானுஜர் உற்ஸவ மூர்த்திக்கு 108 கலச ஸ்தபன விஷேச திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமானுஜ நூற்றந்தாதி பாராயணமும் நடந்தது. இந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் சேலம் ஸ்ரீ பகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டன.