ராமேசுவரம் கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் தரிசனம் | Sringeri Swamigal Visit to Rameswaram Temple

ராமேசுவரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி தரிசனம் செய்தார்.
தூளி பாத பூஜை: தமிழகத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம் சுவாமிகள் நேற்று முன்தினம் மாலை ராமேசுவரம் வந்தார். ராமேசுவரம் சிருங்கேரி மடத்தில் தூளி பாத பூஜை செய்த சிருங்கேரி சுவாமிகள், இரவு ராமநாத சுவாமி கோயில் 3-ம் பிரகாரத்தில் ஸ்ரீ சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜையை நடத்தினார்.
நேற்று காலை ராமநாத சுவாமி கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் செய்த சிருங்கேரி சுவாமிகள், ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தார். பின்னர் தனுஷ்கோடி சென்ற சிருங்கேரி சுவாமிகள், மணலில் வரையப்பட்ட ராம தனுஷ் உருவத்துக்கு பூஜை செய்து, தனுஷ்கோடி கடலில் சேது ஸ்நானம் செய்தார். இந்த நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.