மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: வில்லாபுரம் மண்டகப்படியில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்! | madurai Meenakshi Amman Temple Chithirai Festival Villapuram Mandakapadi

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாளான வெள்ளிக்கிழமை வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் தங்கப் பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருளினர். மாலையில் அங்கிருந்து கோயிலுக்கு புறப்பாடானபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெறும். நான்காம் நாளான வெள்ளிக்கிழமை காலையில் கோயிலிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனி தங்கப் பல்லக்கில் புறப்பாடாகினர்.
கிழக்கு சித்திரை வீதி, கோயில் தெரு, தெற்காவணி மூல வீதி, தொட்டியன் கிணற்றுத் தெரு, சின்னக்கடைத் தெரு, தெற்கு வாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளினர். பின்னர், மாலை அங்கிருந்து கோயிலுக்கு புறப்பாடாகினர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 8-ம் தேதி காலை 8.35 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 9-ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
அதேபோல், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 8-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. வரும் 10-ல் அழகர்கோயில் மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். 11-ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். 12-ம் தேதி அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கள்ளழகரை தரிசனம் செய்ய உள்ளனர்.