பழநி கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி – ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் | Break Darshan facility to be available soon at Palani temple

பழநி: பழநி முருகன் கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு பொது (இலவச) தரிசனம் மட்டுமின்றி, ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசன வசதியும் உள்ளது. இது தவிர பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்களுக்கு விஐபி தரிசனம் எனப்படும் சிறப்பு தரிசன வசதிக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்குகிறது.
அண்மைக்காலமாக பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் முக்கிய கோயில்களில் ‘இடைநிறுத்த தரிசன’ (பிரேக் தரிசனம்) வசதி ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பழநி முருகன் கோயிலில் விரைவில் ‘பிரேக் தரிசன’ வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
44 நாட்கள் தவிர… இந்த திட்டத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். இந்த சேவை தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெறும் 10 நாட்கள், மாத கிருத்திகை, தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு உட்பட முக்கிய விசேஷ நாட்கள் என மொத்தம் 44 நாட்கள் செயல்படுத்தப்பட மாட்டாது. இந்த தரிசன சேவைக்கு பக்தர் ஒருவருக்கு தலா ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும்.
அவ்வாறு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்தம் டப்பா, தேங்காய், பழம், விபூதி, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு பிரசாதமாக வழங்கப்படும். மேலும் இந்த தரிசன வசதி குறித்து பக்தர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை அல்லது ஆலோசனைகள் இருந்தால் எழுத்துப்பூர்வமாக வரும் 29-ம் தேதிக்குள் பழநி தேவஸ்தான அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.