menu Home
Spirituality

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் மண்டபங்கள் அமைக்கும் பணி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்! | Ministers inaugurate construction work at Thiruverkadu Devi Karumariamman Temple

BhaktiSongsAdmin | May 6, 2025


திருவேற்காடு: பூந்தமல்லி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன் மண்டபங்கள் அமைக்கும் பணியை இன்று காலை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் அமைந்துள்ளது தேவி கருமாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர்.

இந்நிலையில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.70.27 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன் மண்டபங்கள் அமைக்கும் பணியை இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்திடும் வகையிலும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு இக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையை அடிப்படையாய் கொண்டும் கட்டமைப்பு வசதிகள், கருங்கல் கட்டுமானப் பணிகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறைக்கு இதுவரை ரூ.1.007 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு கோயில் திருப்பணிகளுக்காக அரசு நிதியை ஒதுக்கி தந்த பெருமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையே சாரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.