menu Home
Spirituality

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | thiruparankundram murugan temple kumbabishekam witnessed by thousands of devotees

Bhakti Teacher | July 14, 2025


மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதனை முன்னிட்டு ரூ.2 கோடியே 44 லட்சம் மதிப்பில் ராஜகோபுரத்தில் 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் 1 தங்கக் கலசம், கணபதி கோயில் 1 கலசம் உள்பட 9 கலசங்கள் உள்பட 20 திருப்பணிகள் நடந்துள்ளன. உபயதாரர் மூலம் ரூ.70 லட்சத்தில் ராஜகோபுர திருப்பணிகள் நடந்துள்ளன.

இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை பக்தர்கள் காணும் வகையில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டன. கோயில் வளாகத்தில் வள்ளி தேவசேனா மண்டபத்தில் 75 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 200 சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதல் கால யாக பூஜை ஜூலை 10-ம் தேதி மாலை தொடங்கியது. இரண்டாம் நாள், மூன்றாம் நாள், நான்காம் நாள் என காலை, மாலையில் யாக பூஜை நடந்தது. அதனையொட்டி நேற்று நடந்த 6, 7-ம் கால யாக பூஜையில் வேத சிவாகமத்துடன் பெண் ஓதுவார்கள் உட்பட 80 ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் கந்தர் அனுபூதி ஆகிய செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நேற்றிரவு (ஜூலை 13) 10 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் பரிவார மூர்த்திகளுடன் புறப்பட்டனர். இன்று (ஜூலை 14) அதிகாலையில் திருப்பரங்குன்றம் வந்த மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஐந்தாம் நாளான இன்று (ஜூலை 14) அதிகாலை 3.45 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை 5.31 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள், கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி ஆகிய விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ராஜகோபுரத்தில் உள்ள 7 தங்க கலசம், அம்பாள் சன்னதியில் 1 கலசம், கணபதி கோயில் 1 கலசம் உள்பட 9 கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்குப் பின் 10 ட்ரோன்கள் மூலம் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு பச்சைக்கொடி அசைக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி, திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் துணை ஆணையர்கள் அனிதா, இனிகோ திவ்யன், வனிதா (போக்குவரத்து) ஆகியோர் மேற்பார்வையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி தலைமையில் கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன், அறங்காவலர்கள் மணிச்செல்வன், சண்முகசுந்தரம், பொம்மதேவன், ராமையா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.