திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம் | Aani festival begins with flag hoisting in Tirunelveli Nellaiappar Temple

திருநெல்வேலி: தமிழகத்தின் ஆன்மிகச் சிறப்புமிக்க திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் 518-வது ஆனிப் பெருந்திருவிழா, இன்று (ஜூன் 30, 2025) காலை கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, பக்திப் பரவசத்துடன் தொடங்கிய இந்தத் திருவிழா, அடுத்த பத்து நாட்களுக்கு மாநகரையே விழாக்கோலமாக்க உள்ளது.
பக்தி வெள்ளத்தில் கொடியேற்றம்: இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் ஆனித் திருவிழா நடவடிக்கைகள் தொடங்கின. இதைத் தொடர்ந்து, மகா மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
சரியாக காலை 7.30 மணியளவில், மேள தாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, நெல்லையப்பர் கோவிலின் கம்பீரமான கொடிமரத்தில் திருவிழாக் கொடி ஏற்றப்பட்டது. கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அழகிய அலங்காரங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆணிப் பெரும் திருவிழா தேரோட்டம் வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளது.