menu Home
Spirituality

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் உற்சவம்! | 63rd Nayanmar festival held at Thirukazhukundram Vedagiriswarar Temple

BhaktiSongsAdmin | May 6, 2025


திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் பாடல் பெற்றது. இந்த கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், விழாவின் 3-ம் நாளான இன்று காலை மே 3-ம் தேதி அதிகார நந்தி மற்றும் 63 நாயன்மார்களின் உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அதிகார நந்தியின் மீது வேதகிரீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி, அம்பாளுடன் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும் 63 நாயன்மார்களும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதையடுத்து, 63 நாயன்மார்களும் சுவாமியை வணங்கியபடி ஊர்வலமாக செல்ல, முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி வீதியுலா நடைபெற்றது. மலையைச் சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் சுவாமி உலா செல்ல, பக்தர்கள் சுவாமியை வணங்கியபடி கிரிவலம் வந்தனர். பக்தர்கள், ‘ஓம் நமச்சிவாய’ என்ற வேத மந்திரங்கள் முழங்க கிரிவலம் வந்தனர்.

அவரை தொடர்ந்து திரிபுரசுந்தரி அம்மன், முருகன், வள்ளி, தெய்வணை, சண்டிகேஸ்வரார் ஆகியோர் எழுந்தருளி வடக்கு கோபுர வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில், திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புறங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வழி நெடுகிலும் பஞ்சமூர்த்திகளுக்கு தேங்காய் உடைத்தும் கற்பூர ஆரத்தி காட்டியும் சாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பு மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. மே 7-ம் தேதி, சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத உற்சவம் நடைபெற உள்ளது. இந்த 63 நாயன்மார்கள் வீதி உலாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் ச. புவியரசு மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.