ஜூலை 15 முதல் பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை 31 நாட்களுக்கு நிறுத்தம் | Palani Murugan Temple Rope Car Service to be Suspended from July 15

பழநி: பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூலை 15-ம் தேதி முதல் ஆக.14-ம் தேதி வரை மொத்தம் 31 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) ஆகிய வசதிகள் உள்ளன. இழுவை ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்களிலும் மலைக்கோயிலை அடையலாம். பழநி மலையின் அழகை ரசித்தபடி, ரோப் காரில் செல்லவே பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மாதந்தோறும் ஒரு முறையும், ஆண்டுதோறும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 30 முதல் 40 நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. அதன்படி, வரும் ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை, மொத்தம் 31 நாட்களுக்கு வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதை மற்றும் யானைப் பாதையை பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.