சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர் | Kumbabhishekam to be held tomorrow at Subramaniam Swamy Temple

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (ஜூலை 7) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அறுபடை வீடுகளில் 2-வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சுப்பிரமணியர், வள்ளி மற்றும் தெய்வானை அம்மனுக்கு, அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடியில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தந்திரி சுப்பிரமணியரு தலைமையில் கேரள முறைப்படி யாகங்கள் நடைபெறுகின்றன.
அதேபோல, மூலவர் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ராஜகோபுரத்தின் கீழ் பிரம்மாண்ட யாகசாலையில் 71 ஹோம குண்டங்கள் அமைத்து, 700 கும்பங்களுடன் பூஜைகளும், 5 ஹோம குண்டங்களில் வேள்விகளும் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 10-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர கலசங்கள், மூலவர், வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு தந்திரி மற்றும் போத்திகளும், சுவாமி சண்முகர் மற்றும் பரிவாரமூர்த்தி கலசங்களுக்கு சிவாச்சாரியார்களும், பெருமாள் கலசங்களுக்கு பட்டாச்சாரியார்களும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவை கண்காணித்து சிறப்பாக நடத்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் நகரில் 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான தளத்தில் மடாதிபதிகள், நீதிபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் விஐபிக்கள் என 800 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
விழாவையொட்டி 400 சிறப்பு பேருந்துகளும், நகரில் தற்காலிக வாகன நிறுத்தமிடங்களில் இருந்து ரதவீதிகள் வரை 30-க்கும் மேற்பட்ட நகர பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்கு 70 இடங்களில் எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகம், நகர் முழுவதும் 1,000 சிசிடிவிக்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மேலும், ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது.
மொத்தம் 1,500 செவ்வாழை மரங்கள், 5 ஆயிரம் செங்கரும்புகள், 1,500 இஞ்சி குலைகள், பலாப்பழங்கள், மா, முந்திரி கொத்து, பாக்குமரங்கள் ஆகியவற்றின் மூலம் கோயில் வளாகம், உட்பிரகாரம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள 137 அடி உயர பிரம்மாண்ட ராஜகோபுரத்தில் நேற்றிரவு லைட் ஷோ காண்பிக்கப்பட்டது.