கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் | Kumbabhishekam Celebration in Kandakottam Muthukumaraswamy Temple

சென்னை: கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ராஜகோபுரக் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது ‘அரோகரா’ கோஷத்துடன் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை பூங்கா நகர் கந்தகோட்டத்தில் நூற்றாண்டு பழமையான முத்துக்குமாரசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில்வள்ளி, தேவசேனா உடனுறை முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டும் ஜூலை 15-ம் தேதி இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கந்தகோட்டத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
அந்த வகையில், கோயில் நிதி மற்றும் உபயதாரர் நிதி ரூ.91.50 லட்சம் மதிப்பீட்டில் கோயில் ராஜகோபுரம், அனைத்து சந்நிதிகள், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன. தொடர்ந்து கடந்த 10-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து, பிரவேச பலி, கோ பூஜை, புண்ணியாக வாசனம், எஜமானர் சங்கல்பம், கும்பலங்காரம், கலாகர்ஷணம், தீபாராதனைகள் நடந்தன.
3,386 கோயில்களில்.. இந்நிலையில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, அவபிருதயாகம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. பின்னர், காலை 9.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, ராஜகோபுரக் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். கோபுரக் கலசத்தில் ஊற்றப்பட்ட புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதையடுத்து மூலவர் முத்துக்குமாரசுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 3,386 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது எனவும், அதில் 131 கோயில்கள் முருகன் கோயில்கள் எனவும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.