காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி நாளை பொறுப்பேற்பு | youngest abbot of Kanchi Sankara Mutt will take charge tomorrow

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் ஏப். 30-ம் தேதி (நாளை) அதிகாலையில் சந்நியாஸ்ரம தீட்சை வழங்கவுள்ளார். இதற்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 -வது பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சி மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஏப்.30-ம் தேதி அட்சய திருதியை தினத்தில் (நாளை) அதிகாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நேற்று ஸ்ரீ விஜயேந்திர சர்ஸவதி சுவாமிகள் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சந்நியாஸ்ரம தீட்சை வழங்கும் நிகழ்ச்சி மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த திருக்குளத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் சந்நிதியில் தரிசனம் முடித்து கோயில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதிக்கு வந்ததும் தீட்சை நாமம் சூட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக கோயிலில் இருந்து கொல்லா சத்திரம், ராஜ வீதி வழியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளைய மடாதிபதியும் ஊர்வலமாக சங்கர மடத்துக்கு காஞ்சி நகர வரவேற்புக் குழுவின் சார்பில் அழைத்து வரப்படுகின்றனர். சங்கர மடம் வந்து சேர்ந்ததும் இளைய மடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71-வது பீடாதிபதியாக பொறுப்பேற்கிறார். இந்த விழாவுக்கு கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.