காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்பு! | Ganesha Sharma Dravid anointed as 71st pontiff of Kanchi Kamakoti Peetam

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்றார். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியான ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று முதல் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று அழைக்கப்படுவார் என, அவருக்கு சந்நியாஸ்ரம தீட்சை வழங்கிய சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது ஆசி உரையில் குறிப்பிட்டார்.
கடந்த 25-ம் தேதி காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், புனித அட்சய திருதியை தினத்தில் (ஏப்.30-ம் தேதி, புதன்கிழமை) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் காலை 6 மணி முதல் 9 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை அருள உள்ளார்” என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு, சந்நியாஸ்ரம தீட்சை வழங்கும் வைபவம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்தத்தில் இன்று காலை நடைபெற்றது.
தீர்த்த அபிஷேகம்: சந்நியாஸ்ரம தீட்சை பெருவதற்கு முன்பாக ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா திராவிட், திருக்குளத்தில் இறங்கி தான் அணிந்திருந்த கடுக்கண், மோதிரம், பூணூல், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, சந்நியாசத்தை ஏற்றார். அதன்பின், வேத மந்திரங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அவருக்கு தீட்சை வழங்கி பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை வழங்கினார்.
தொடர்ந்து இளைய மடாதிபதியின் தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்களைச் செய்தார். தொடர்ந்து, பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அவருக்கு ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற திருநாமத்தை சூட்டினார்.
இதனைத் தொடர்ந்து குழுமியிருந்த பக்தர்களுக்காக ஆசி உரை வழங்கிய பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், “இன்று நடந்த இந்த மகத்தான, பிரம்மாண்டமான நிகழ்ச்சி பரம்பரையை, பாரம்பரிய நம்பிக்கைகளை நாம் தெரிந்து கொள்வதற்கு, புரிந்து கொள்வதற்கு அதன்படி நடப்பதற்கான இந்த தேசத்திலேயே மிக மிக முக்கியமான பீடமாக விளங்கக்கூடிய காஞ்சி காமகோடி பீடத்தினுடைய தியாக பரம்பரையின் அடையாளமாக, தியாக பரம்பரையின் சிகரமாக, தியாக பரம்பரையின் உண்மையான உருவமாக இன்று நம்மிடையே, அந்த குடும்பத்தில் இருந்து இவர் இந்த பக்கம் வந்திருந்தாலும் காஞ்சி காமகோடி பீட குடும்பத்தில் இவர் சேர்ந்திருக்கிறார்.
இந்த அரிய நிகழ்ச்சியில், நம்முடைய பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் இவர்களை இன்று முதல் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்கிற பெயருடன் அனைவரும் அழைத்து, மகிழ்ந்து, அந்த குரு பரம்பரையின் அணுகிரகத்தை இவர் மூலமாக நீங்கள் அனைவரும் பெற்று உங்களுடைய தர்ம மார்க்கம் சிறப்பதற்கு அந்த குரு பரம்பரையை நினைத்து புண்ணியத்தை, புருஷார்த்தத்தைப் பெருவதற்கு நீங்கள் எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.
சத்தியத்தை விரதமாக மேற்கொண்டு, பரமாத்மாவை விரதமாகக் கொண்டு அல்லது விரதத்தை உண்மையாக மேற்கொண்டு பேருக்காகவோ, புகழுக்காகவோ, படாடோபத்துக்காகவோ மேற்கொள்ளாமல் ஆத்மார்த்தமாக அந்த சத்ய விரதத்தை மேற்கொண்டு 3 வேதங்களையும் குருமுகமாக அத்யாயனம் செய்து எந்த ஒரு வேதத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆச்சார்யர்கள் சொன்னார்களோ, எந்த வேத பரம்பரையை பிரச்சாரம் செய்வதற்காக நம்முடைய பெரியவர்களும், புதுப் பெரியவர்களும் பாடுபட்டு நல்ல வழியை நமக்கு காண்பித்திருக்கிறார்களோ அந்த வழியை இளம் வயதிலேயே அந்த பூர்வ சம்ஸ்கார சம்பந்தத்தாலே கற்று தேர்ந்திருக்கக்கூடிய இவர்களுக்கு…
வரங்கள் நமக்குத் தேவை. அவை ஞானமாகவும் இருக்கலாம், ஐஸ்வர்யமாகவும் இருக்கலாம், சந்தானமாகவும் இருக்கலாம், வித்யையாகவும் இருக்கலாம், நல்ல சுபாவமாகவும் இருக்கலாம், மொத்தத்தில் வரம் என்பது மனிதர்களுக்குத் தேவையான ஒன்று. அதில், அனைவருக்கும் உணவு, அனைவருக்கும் நல் உணர்வு, அனைவருக்கும் நல்ல உள்ளம் இதை அளிக்கக்கூடிய அன்னவரம் சத்ய நாராயண சுவாமிகளுடைய அனுகிரகத்தையும் மனதிலே கொண்டு சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பதாக…
காஞ்சிபுரத்தின் பெயரும் சத்ய விரதம் என்பது. 17 வருடங்களுக்குப் பிறகு இந்த அட்யதிருதியை விசேஷமானதாக வந்திருக்கிறது. இதற்குப் பிறகு 27 வருடங்கள் கழித்தே இப்படி ஒரு அட்யதிருதியை வர இருக்கிறது. இப்படி, இந்த முக்கியமான முகூர்த்தத்திலே குறைந்த அவகாசத்திலே நீங்கள் எல்லோரும் நிறைந்து காணப்படுகிறீர்கள். மனதினாலும் நீங்கள் நிறைந்து காணப்படுவீர்கள் என நினைக்கிறோம்.
உங்களுக்கான குரு வந்திருக்கிறார். அவருக்கான சிஷ்யர்களாக நீங்கள் அனைவரும் உங்களுயை சிரத்தையை, உங்களுடைய பக்தியை, உங்களுடைய சமர்ப்பணா புத்தியை மேன்மேலும் அதிகரித்துக்கொண்டு இந்த ஞான பரம்பரையானது, தியாக பரம்பரையானது, சேவை பரம்பரையானது மேலும் மேலும் இந்த தேசத்துக்கும் இந்த தர்மத்துக்கும், இந்த சமுதாயத்துக்கும் உலகத்திலே விஸ்வ சாந்தி ஏற்படுவதற்கும், அத்வைத தத்துவம் பிரச்சாரம் ஆவதற்கும், அனைவருக்கும் பதவி, அனைவருக்கும் பணம் என்றிருந்தாலும் அனைவருக்கும் தேவையானது புண்ணியம். அந்த புண்ணியத்தை அளிக்கக்கூடிய தவ வலிமையோடு கூடிய, அனுக்கிரக சக்தியோடு கூடிய, பெரியவரின் அனுக்கிரத்தோடு, புதுப் பெரியவரின் அனுக்கிரகத்தோடு, காமாட்சி அம்மனின் அனுக்கிரகத்தோடு இந்த தர்மங்கள் மென்மேலும் சிறக்க அனைவரும் முயற்சிப்போமாக” என ஆசி உரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.