menu Home
Spirituality

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி இன்று பொறுப்பேற்பு | madadhipathi of the Kanchipuram Sankara Mutt takes charge today

BhaktiSongsAdmin | May 7, 2025


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் இன்று பொறுப்பேற்கிறார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கா தீர்த்த குளத்தில் அட்சய திருதியை தினத்தில் (இன்று) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சை வழங்குகிறார்.

இந்த விழாவை காண வருபவர்கள் கோயில் தெற்கு வாசல் வந்து நவராத்திரி மண்டபம் வழியாக பார்வையாளர் இடத்துக்கு வர வேண்டும். அங்கிருந்து திருக்குளத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சியையும் பொதுமக்கள் காணலாம்.

ஆதீனங்கள், சந்நியாசிகள் ஆகியோர் திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் தெப்பலில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கியப் பிரமுகர்கள் பார்வையிட தெற்கு கோபுர வாயில் பகுதியிலும், பத்திரிகையாளர்கள் செய்திகளை சேகரிக்க கோயில் வளாகத்தில் கிழக்குப்பக்கத்தில் உள்ள பெருமாள் சந்நிதி முன்பாகவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கு வருவோர் வாகனங்களை தெற்கு கோபுர வாயில் பகுதியில் உள்ள எஸ்எஸ்கேவி மேல்நிலைப் பள்ளியில் நிறுத்திக் கொள்ளலாம் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரம தீட்சை நிறைவுற்று ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இளைய மடாதிபதியும் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சந்நிதியில் இளைய மடாதிபதிக்கு தீட்சை நாமம் சூட்டும் நிகழ்வு நடைபெறும். பின்னர் இருவரும் ஊர்வலமாக மேற்கு ராஜ வீதி வழியாக சங்கர மடம் வருகின்றனர். அங்கு 71-வது மடாதிபதியாக ஸ்ரீ கணேச சர்மா திராவிட் பொறுப்பேற்கிறார்.

ஆளுநர் பங்கேற்பு: இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மடாதிபதிகள், சந்நியாசிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்தின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.