‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ புத்தகம் வெளியீடு | Little India and the Singapore Indian Community book launch

சிங்கப்பூர்: செளந்தர நாயகி வயிரவன் எழுதிய ‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ (Little India and the Singapore Indian Community) என்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை சிங்கப்பூரின் விக்டோரியா ஸ்ட்ரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியத்தில் நடைபெற்றது.
187 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை லிட்டில் இந்தியா கடைக்கார்கள் மரபுடைமை சங்கம் வெளியிட்டது. இந்த நிகழ்வில் சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜார்ஜியோ கலந்துகொண்டு சிறப்பித்தார். சிங்கப்பூருக்கான இந்திய தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலேவும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவர்களோடு பல சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் புத்தகத்தில் லிட்டில் இந்தியா உருவான கதையில் இருந்து அது மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றுகின்றது, அங்கு அமைந்துள்ள கோயில்கள், கலைக்கூடங்கள், தற்போது லிட்டில் இந்தியா பகுதியில் வியாபாரம் தொடங்கி செயல்படுவது போன்ற பல அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.
இந்தப் புத்தகம் பல வண்ண புகைப்படங்களோடு அனைவரையும் கவரும் வகையில் பல தகவல்களை உள்ளடக்கி கலைக் களஞ்சியமாக திகழ்கின்றது.
புத்தகம் குறித்து அதன் ஆசிரியர் செளந்தர நாயகி வைரவன் கூறுகையில், “இதுபோன்ற வரலாற்றுப் புத்தகங்களின் வெளியீட்டால் இளம் தலைமுறையினர், அவர்களது மூதாதையர் கடந்து வந்த பாதைகளைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக இந்தப் புத்தகத்தை எழுதினேன். மேலும், லிட்டில் இந்தியா பகுதியில் பல அம்சங்கள் உள்ளன. அவற்றை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த புத்தகம் எழுதப்பட்டது” என்று கூறினார்.
சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் ஜார்ஜியோ கூறுகையில், செளந்தர நாயகி மிக நுணுக்கமாக லிட்டில் இந்தியா பற்றி பல அம்சங்களை உள்ளடக்கி இந்தப் புத்தகத்தை அழகாக எழுதியுள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்” என்றார்.