மந்திரியின் ஆள்மாறாட்டம்! | நம் வெளியீடு | kazhugu kottai book review in tamil

ஒரு யதார்த்தமான கதையை விறுவிறுப்புடன் சிறார்களுக்காக இந்த நாவலை ஓவியர் வெங்கி என்கிற வெங்கடேசன் எழுதியிருக்கிறார். அளவுக்கு அதிகமாக, வரிகளை விதித்து மக்களைத் துன்பப்படுத்தும் கொடுமைக்கார மந்திரியிடமிருந்து நாட்டையும் மக்களையும் காக்க ஒரு இளைஞன் போராடுகிறான். ஒரு கழுகும் அவனுக்குத் துணை புரிகிறது. ஆள்மாறாட்டம், சாகசம் எனச் சுவாரசியமான பலதும் இந்த நாவலில் இருக்கின்றன.
‘சந்தமாமா’ சங்கர் என்று வாஞ்சையுடன் அழைக்கப்படும் பத்மஸ்ரீ கே.சி.சிவசங்கரனிடம் ஓவியக்கலையின் அழகியலை பயின்றவர் வெங்கடேசன். அண்மைக் காலமாகத் தமிழ் வெகுஜன இதழ்கள் சித்திரக்கதைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்கிற விமர்சனத்தைக் களையும் வகையில், அழகிய ஓவியங்களுடன் அபாரமாக புனையப்பட்ட சிறார் நாவல்தான், ‘கழுகுக் கோட்டை’.
‘இந்து தமிழ் திசை’யின் சார்பாக பள்ளி நாளிதழிலாக வெளிவந்துகொண்டிருந்த ‘வெற்றிக்கொடி’யில் வெங்கி எழுதிய தொடர் இது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் அரசியல் நையாண்டி துணுக்குகளுக்குச் சித்திரம் தீட்டுவதில் வல்லவரான இவர் எழுதி இருக்கும் முதல் சித்திரக்கதை நாவல் இது. நவநாகரிக உலகின் இயந்திரகதியிலிருந்து தப்பிச் செல்ல எத்தனிக்கும் எல்லா வயதினருக்கும், ‘கழுகுக்கோட்டை’ புத்தம் புது பூமியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும்.
கழுகுக்கோட்டை
வெங்கடேசன்
விலை: ரூ.200
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
மரப்பாச்சி பெண்ணிய நாடக விழா | திண்ணை: மரப்பாச்சி அமைப்பு, அலையன்ஸ் பிரான்சிஸுடன் இணைந்து இருநாள் பெண்ணிய நாடக விழாவை ஒருங்கிணைக்கிறது. இன்றும் (07.06.25), நாளையும் (08.06.25) கல்லூரிச் சாலையில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸில் இந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நாடகங்களை நாடகவியலாளர் அ.மங்கை நெறியாள்கை செய்கிறார். கவிஞர் இன்குலாபின் ‘ஒளவை’ நாடகம் எஸ்.ராமசாமி வடிவமைப்பில் நிகழ்த்தப்படவுள்ளது.
அமெரிக்கக் கவிஞர் மாயா ஏஞ்சலோவின் கவிதையை செளமியா நாடக வடிவில் நிகழ்த்தவுள்ளார். திருநகர்ச் சமூகச் செயற்பாட்டாளர் ஆ.ரேவதியின் நிகழ்வும் இந்த விழாவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளில் கலந்துரையாடலும் ஓபன் மைக் எனும் திறந்த வெளிக் கள நிகழ்வும் நடைபெறவுள்ளன. இருநாட்களும் காலை 10 மணி முதல் நிகழ்வுகள் தொடங்கப்படவுள்ளன.
சிவகுமார் முத்தையாவுக்கு விருது: எழுத்தாளார் சிவகுமார் முத்தையாவுக்கு தஞ்சை பிரகாஷ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு சிறுகதைத் தொகுப்பும் ‘குரவை’ என்கிற நாவலும் வெளியாகியுள்ளன. இந்த விருது கீரனூர் புக்ஸ் சார்பில் வழங்கப்படுகிறது.
கோவில்பட்டி புத்தகக் காட்சி: தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார்-மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி வாசகர் வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் புத்தகக் காட்சி, கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் காந்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 09.06.2025 வரை நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகமும் கலந்துகொண்டுள்ளது. 10 சதவீத தள்ளுபடியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் கிடைக்கும். அனுமதி இலவசம். தொடர்புக்கு: 88703 76637