பேராசிரியர் தமிழவன், பதிப்பாளர் திருநாவுக்கரசுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது அறிவிப்பு | aranganathan literary award

சென்னை: பேராசிரியர் தமிழவன், பதிப்பாளர் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.
கவிதை, சிறுகதை, நாவல், கதைகள் என படைப்பின் அனைத்து தளங்களிலும் தீர்க்கமான பார்வைகொண்ட, தனித்துவப் படைப்பாளி மா. அரங்கநாதனின் நினைவைப் போற்றும் வகையில் 2018 முதல் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
கவிதை, சிறுகதை, நாவல்,கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்துறையில் பல்லாண்டுகளாக பங்களிப்பாற்றி வரும் படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் விருதும், தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பும் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இலக்கியப் படைப்புலகில் உயரிய விருதாக கருதப்படும் மா.அரங்கநாதன் இலக்கிய விருது நடப்பாண்டு பேராசிரியர் தமிழவன், எழுத்தாளர் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. சென்னை ராணி சீதை அரங்கில் வரும் 16-ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறும் விழாவில், மா.அரங்கநாதனின் மகனான உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் விருது களை வழங்குகிறார். மேலும், மா.அரங்கநாதன் மற்றும் முன்றில் வலைதளங்களையும் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
பேராசிரியர் தமிழவன், தமிழின் முக்கியப் படைப்பாளியாக, கல்வியாளராக, நவீன இலக்கிய அமைப்புகளை உருவாக்கியவராக அறியப்படுபவர். பெங்களூரு, ஆந்திர பல்கலைக்கழகங்கள், போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக்கழகம் போன்றவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், கடந்த 50 ஆண்டுகளாக தமிழ், மலையா ளம், கன்னடம், ஆங்கிலம் என பல் வேறு மொழிகளில் கட்டுரைகள், நாவல்கள், விமர்சனங்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.
சிறந்த பதிப்பாளர், கட்டுரையாளர், தமிழிசை ஆய்வாளர், திரைக்கலை தொகுப்பாளர், இசையுலக ஆளுமைகளின் வரலாற்றைப் பதிவு செய்தவராக அறியப்படும் ப.திருநாவுக்கரசு, கடந்த 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் பங்களித்து வருகிறார். கவிதைகள் தொகுப்பு,திரைத்துறை தொகுப்பு, இசைப் படைப்புகள், 75-க்கும்மேற்பட்ட குறும்படப்பட்டறைகள், நிழல் பத்திரிகை ஆகியவற்றின் மூலம் இவர் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.