தமிழ்ச் சிறுகதையின் முகம் | about shobasakthi stories review in tamil

தமிழ்ச் சிறுகதையாளர்களில் ஷோபாசக்திக்குத் தனியிடம் உண்டு. மொழியை நவீனப்படுத்திய இளம் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவர் அவர். விவரிப்பு மொழியில் பிற்காலத்தில் ஏற்பட்ட கூர்மை ஒரு கட்டத்தில் தேய்வழக்காகிவிட்டது.
உரையாடல் மிகுந்தும் பத்திரிகை பாணியிலும் கதைகள் அதிகமாக எழுதப்பட்டன. இதிலிருந்து விலகி, விவரிப்பின் கூர்மை, உரையாடலின் யதார்த்தம் போன்ற அம்சங்களை உள்வாங்கி முன்னுதாரணமான கதைகளைப் படைத்துவருபவர் என ஷோபாவைச் சொல்லலாம்.
ஷோபா, சிறுகதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் பொருளில், நவீனம் இருக்கிறது; இதுவரை சிறுகதை கைக்கொள்ளாத விநோதம் இருக்கிறது. இந்த அம்சங்கள் அவரது சிறுகதைகளை நோக்கி வாசகர்களை ஈர்க்கின்றன. ஐரோப்பியச் சூழல் அனுபவங்கள், புலம்பெயர் வாழ்க்கையின் அடையாளக் குழப்பங்கள் எனப் பல விஷயங்களை அவரது கதைகளில் பார்க்க முடிகிறது. ஈழப் பின்னணியிலும் கதைகள் எழுதப்பட்டுள்ளன.
ஆண்மை இல்லாதவன் எனத் தன்னை நினைத்துத் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகும் ஒருவனை ஒரு கதையில் ஷோபா சிருஷ்டித்துள்ளார். அவனது தாழ்வு மனப்பான்மை என்னும் தனி அனுபவத்தை, ஈழ அரசியல், சமூகப் பின்னணியுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டியது என்கிற ஒரு தன்மையை அந்தக் கதை வழி ஷோபா உருவாக்கியிருப்பார். பிறகு, அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது; அதுவும் வழக்கம்போல் இல்லாமல் போகிறது.
ஷோபாவுக்கு முன்பாக இந்தப் பின்னணியில் எழுதியவர் என அ.முத்துலிங்கத்தைச் சொல்லலாம். சுவாரசியத்துக்கு அப்பாற்பட்ட கேள்விகளோ கூர்மையான அரசியல் பார்வையோ அவரது கதைகளுக்கு இல்லை. அங்கதமும் சொல்முறையின் ஓட்டமும் கிட்டத்தட்ட ஷோபாவுடன் ஒப்பிடத்தகுந்தது.
ஆனால், ஷோபாவின் கதைகள் அவரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை. புலம்பெயர் வாழ்க்கையின் செளகரியம் ஷோபாவின் கதைகளில் இல்லை. ‘மாறாக’ சிதைவு வெளிப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டின் நம்பிக்கைகள், அறம் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்குகிறார் ஷோபா.
ஐரோப்பாவில் ஒரு வீட்டுக்குத் திருடர்கள் வருகிறார்கள். வந்தவர்களில் ஒருவன் அந்த வீட்டில் தனித்திருக்கும் ஒரு அம்மாவைப் பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறான். அவருக்கோ பாட்டி வயது. அவர் ஈழத்தில் மதிப்புமிக்க ஒரு ஆசிரியராக இருந்தவர். இது மகனுக்குத் தெரிந்துவிடுகிறது. இங்கு கற்பு என்கிற கற்பிதம் மகனை நிம்மதியிழக்கச் செய்கிறது. இந்த விஷயத்தை அந்தத் தாய் கையாண்ட விதம், நமது அற்பத்தனமான கற்பிதங்களைத் தகர்த்துவிடுகிறது.
ஷோபாவின் இந்த மொத்தத் தொகுப்பின் வழி அவரை அணுகுவதற்கான ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. இரு பதிற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் மொழியில் தீவிரமாக இயங்கிவரும் ஓர் எழுத்தாளரின் பயணத்தையும் இந்த நூல் துலக்கம் பெறச் செய்கிறது. இந்தச் சிறுகதைகள், தமிழ்நாட்டுக் கதைப் போக்கிலிருந்து விலகி, தனித்துவமாக எழுதப்பட்டுள்ளதையும் கணிக்க முடிகிறது. எதைக் கதைப் பொருளாகக் கொள்வது, கொண்ட பொருளை எப்படிக் கதைகளுக்குள் நகர்த்துவது என்பதற்கான படிப்பினையாக இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைச் சொல்லலாம்.
ஷோபாசக்தி கதைகள்
கருப்புப் பிரதிகள்
விலை: ரூ.1,100
அரங்கு எண்: 555, 556