சிவனடியார்களைப் போற்றுவோம்! | நம் வெளியீடு | book on Sivanadiyargal in tamil

அகத்துக்குள்ளேயே சிவபெருமானை நினைத்து நிகழ்த்தப் பெறும் பூஜை மானத பூஜை (அக வழிபாடு) என்று கூறப்படுகிறது. சிவலிங்கத் திருக்கோலம், அபிஷேகப் பொருள்கள், மலர்கள், ஆடை, தூபதீபங்கள், இருக்கை, பூஜைப் பாத்திரங்கள் போன்றவற்றைக் கொண்டு புற வழிபாடு நிகழ்த்தப்படுகிறது.
இந்த வழிபாடு செய்வோர் நீராடித் தூய ஆடை உடுத்தி, திருநீறு பூசி, உருத்திராட்சம் அணிந்து, தக்க ஆசனத்தில் அமர்ந்து, திருவைந்தெழுத்து ஓதி பூஜை செய்ய வேண்டும். திருத்தொண்டர் புராணம், சிவனருள் பெற்ற 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி உரைக்கிறது இந்த நூல்.
சிவனருள் பெற்ற அடியார்கள்
கே.சுந்தரராமன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 74012 96562
இந்து தமிழ் திசை அரங்கு எண்: 55 & 56
சிரத்தையுடன் செய்த சிரமங்கள் | செம்மை: நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் க.நா.சுப்ரமண்யம். பாரதி தொடங்கிவைத்த நவீனத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்தவர் க.நா.சு. அதற்குப் பக்கபலமாக மேலை நாடுகளில் உருவாகி வந்த நவீன இலக்கியங்களை, லாப நோக்கற்று மொழிபெயர்த்தார்.
ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’ இவரது மொழிபெயர்ப்பில்தான் முதலில் தமிழில் வெளியானது. நட் ஹாம்சன், செல்மா லாகர்லாவ் உள்ளிட்ட பலரது ஆக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழிபெயர்ப்புகளுக்கு க.நா.சு. எழுதியுள்ள முன்னுரைகள் ஒவ்வொன்றும் நல்ல அறிமுகங்களாக வெளிப்பட்டுள்ளன.
சிரமமான காரியம்
(மொழிபெயர்ப்பு முன்னுரைகள்)
பதிப்பாசிரியர்: ஸ்ரீநிவாச கோபாலன்
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.270
அரங்கு எண்: 15, 16
வர்க்கமும் வரலாறும் | சிறப்பு: இந்தத் தொகுப்பில் உள்ள கவிதை ஒன்று, கடந்த கால வரலாற்று நிகழ்வுகளைத் தற்காலத்துக்கான தூண்டுதலாக நினைவுபடுத்துகிறது. தமிழ்ச் செவ்வியல் கவிதைகளை ஒத்த காட்சிகளை இந்தக் கவிதைகளில் நிலாதரன் காட்சிப்படுத்தியுள்ளார்.
தலைவனுக்கும் தலைவிக்குமான காதல் ஈரத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. கவிதைகளுக்கான சொற்களைக் கையாள்வதிலும் வடிவத்தைத் தேர்ந்தெடுப்பதிலும் ஒரு நேர்க்கோட்டுத் தன்மையை இந்தத் தொகுப்பு பெற்றுள்ளது கவனத்தை ஈர்க்கும் விஷயமாகப்படுகிறது.
புத்தனின் அரிவாள்
அ.நிலாதரன்
கொம்பு வெளியீடு
விலை: ரூ.100
அரங்கு எண்: 530, 531
துலங்கும் அரசியல் | நயம்: மாற்று ஆய்வுகளுக்கான முன்னோடி ஆ.சிவசுப்பிரமணியன். இனவரைவியல் இலக்கியம், தலித் இலக்கியம் என்பன பற்றித் தெளிவான தனிப்பார்வையை ஆ.சிவசு இந்த நூலில் உள்ள பேட்டியில் வழங்கியுள்ளார். கரிசல் இலக்கியத்தை நவீனப்படுத்தியவர் பூமணி.
இந்த நேர்காணல் தொகுப்பில் இலக்கியம் தாண்டிச் சமூக மாற்றம் குறித்தும், இன்றைய சூழலில் சாதி எப்படிப் பலப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் சொல்கிறார் பூமணி. சோ.தர்மனிடம் வைக்கப்படும் தடாலடியான கேள்விகளும் அவரது பதில்களும் குறிப்பிடத்தக்கவை. தற்கால அரசியலும் இந்த நூல் வழித் துலக்கமாகியுள்ளது.
இலக்கியமும் சாதி அரசியலும்
பழனிக்குமார்
புலம் வெளியீடு
விலை: ரூ.110
அரங்கு எண்: 620, 621
சிறைவாசிகளுக்குச் சில பரிசுகள்! | ஆஹா! – தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் சிறைவாசிகளுக்கு பொதுமக்கள் புத்தக தானம் செய்வதற்காக ஒரு அரங்கம் (அரங்க எண்: 48) அமைக்கப்பட்டுள்ளது. வாசிப்பு நம்மை நமக்கே அடையாளம் காட்டும் என்கிற பொருளில் அமைக்கப்பட்டுள்ள சிலை இது.
வெளி அரங்கில் இன்று… புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (07.01.25) மாலை 6 மணி அளவில் ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்கிற தலைப்பில் ஔவை அருள் உரையாற்ற உள்ளார். இதைத் தொடர்ந்து, ‘தமிழே தமிழே தமிழின் அமுதே’ என்கிற தலைப்பில் சண்முக. ஞானசம்பந்தன் உரையாற்றுகிறார். ‘ஒளியுறும் அறிவு’ என்கிற தலைப்பில் M.P.நாதன் உரையாற்றுகிறார். பபாசி செயற் குழு உறுப்பினர் லெ.அருணாச்சலம் வரவேற்புரையும் பபாசி செயற்குழு உறுப்பினர் இராம.கண்ணப்பன் நன்றியுரையும் வழங்க உள்ளனர்.