சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு நெல்லை பேராசிரியை தேர்வு | Nellai Professor selected for Sahitya Akademi Award for Best Translated

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியை விமலா, சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘என்ட ஆண்கள்’ என்ற மலையாள நூலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை, பிற இந்திய மொதிருநெல்வேலிழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கு, 1955-ம் ஆண்டு முதல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியம் சார்ந்த விருதுகளில் இது உயரிய விருதாகப் பார்க்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய “என்ட ஆண்கள்” என்ற நூலை ” எனது ஆண்கள்” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த பேராசிரியை விமலா, சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியுள்ளார். “எனது ஆண்கள்” நூல் சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விமலா, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியையாகப் பணியாற்றுகிறார். மிகவும் எளிய பின்னணி கொண்ட விமலா, டெல்லியில் உள்ள ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி படிப்பை பயின்றார். இதுவரை 4 நூல்களை மொழி பெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது குறித்து விமலா கூறியதாவது: இளங்கலை பட்டப் படிப்பை தொலைநிலைக் கல்வியில் படித்ததால், பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் எனக்கு ஆராய்ச்சி படிப்பில் இடம் கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில்தான் ஜேஎன்யு பல்கலைக்கழகம் வாய்ப்பு கொடுத்தது. அங்கு ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ள 2 மொழிகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதனால், மலையாளத்தை கற்றுக்கொண்டேன். அதன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து, மொழிபெயர்ப்பு பணியைத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பு என்பது எனக்கு மிகவும் விருப்பமான பணி. ‘என்டே ஆண்கள்’ நூலை தமிழில் மொழி பெயர்த்ததால், சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு தந்தை இல்லை. மருத்துவமனையில் சுடுநீர் வழங்கும் வேலை செய்து எனது அம்மா, என்னை வளர்த்தார். இந்த விருதை எனது அம்மாவுக்கும், உறவினர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.