சிறந்த நூல்களுக்கு பரிசு விண்ணப்பிக்க அழைப்பு | prizes for the best books

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித்துறை பரிசுக்கு ஜூன் மாதம் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்வளர்ச்சி இயக்குநர் ந.அருள் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் பரிசுப்போட்டிக்கு 2024-ம் ஆண்டில் (01.01.2024 முதல் 31.12.2024 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள் சிறுகதை, நாடகம் , சிறுவர் இலக்கியம், திறனாய்வு, விளையாட்டு, மகளிர் இலக்கியம், தமிழர் வாழ்வியல் உள்பட 33 வகைப்பாடுகளின் கீழ் போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.
போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு நூலாசிரியருக்கு ரூ.50 ஆயிரமும், அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.25 ஆயிரமும் பரிசு வழங்கப்படும். போட்டிக்கான விண்ணப்பம் விதிமுறைகளை தமிழ்வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் (www.tamilvalarchithurai.org/siranthanool) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும், போட்டி கட்டணம் ரூ.100-ம் (தமிழ்வளர்ச்சி இயக்குநர், சென்னை என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை) “தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008” என்ற முகவரிக்கு ஜூன் மாதம் 16-ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044 – 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.