எளிய மொழியில் மருத்துவம்! | நம் வெளியீடு | doctor answers book review in tamil

டாக்டர் கு.கணேசன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறை சார்ந்து எளிய தமிழில், சாதாரண மக்களும் மருத்துவ அறிவியலை புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி எழுதிவருபவர். மக்களை அச்சுறுத்தாமல், அறிவூட்டும் வகையிலும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் பொறுப்புள்ள ஒரு மருத்துவராக எழுதிவருகிறார்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ச்சியாக அவர் எழுதிவருகிறார். அவருடைய கட்டுரைகள் பரவலான வரவேற்பைப் பெற்றவை. இந்த நிலையில் வாசகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மருத்துவ சந்தேகங்களை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அனுப்பினர். அதற்கு டாக்டர் கு.கணேசன் அளித்த பதில்கள் வரவேற்பைப் பெற்றன. அதுவே தற்போது நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் பதில்கள்
டாக்டர் கு.கணேசன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 74012 96562
இந்து தமிழ் திசை அரங்கு எண்: 55 & 56
முஸ்லிம் பெண்ணின் கதை | செம்மை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் என்கிற சிறு நகரத்தில் வாழும் ஜமீலா ராசிக், தன்னனுபவக் கதையாக இந்த நூலை எழுதியுள்ளார். முஸ்லிம் பெண்கள் பற்றிய பொதுப் புரிதலுக்கு அப்பாற்பட்டு அந்தப் பெண்களின் யதார்த்தத்தை இந்த நூல் சித்தரிக்கிறது.
முஸ்லிம் பெண்கள் பிறந்ததிலிருந்து அவர்களது வாழ்க்கையை இந்த நூல் குறுக்குவெட்டாகச் சொல்கிறது. இதன்வழி தமிழ்ப் பண்பாட்டின் ஓர் அம்சமாகிவிட்ட முஸ்லிம் பண்பாட்டையும் இந்த நூல் சித்தரிக்கிறது. வாசகர்களுக்கு நெருக்கமான மொழியில் இந்த நூலை எழுதியிருப்பது விசேஷமான அம்சம்.
அது ஒரு
பிறைக்காலம்
ஜமீலா ராசிக்
ஹெர் ஸ்டோரிஸ்
விலை: ரூ.300
அரங்கு எண்: 497, 498
எளிமையானவர்களின் கதைகள் | சிறப்பு: எளிமையான மனிதர்களைக் குறித்த கதைகள் உள்ள தொகுப்பு இது. அவர்கள் தங்கள் வாழ்க்கைக்காகக் கொண்டுள்ள எளிமையான நம்பிக்கைகள், அறம் எல்லாம் இந்தக் கதைகளுக்குள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அந்த அறம் சார்ந்த நம்பிக்கைகளில்தான் இந்தக் கதை மாந்தர்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள். பாண்டி, வேணு ஆகிய இருவரது கதைகளை இந்தத் தன்மைக்கான உதாரணமாகச் சொல்லலாம். இந்தக் கதைகளில் பெண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியமான பங்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகார விநாயகர்
சீராளன் ஜெயந்தன்
நாற்கரம் வெளியீடு
விலை: ரூ.180
அரங்கு எண்: 72
நவீனக் கதைகள் | நயம்: யு.ஆர்.அனந்தமூர்த்தி இந்தியாவின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது ‘சம்ஸ்காரா’ நாவல் இந்தியாவின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய கிளாசிக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வெட்டுக்கிளியைத்தான் இந்தத் தலைப்புக் கதை சூரியனின் குதிரை எனச் சொல்கிறது. இப்படிச் சிறு சொல்லிலிருந்து நெடுங்கதை விவரிப்பை அனந்தமூர்த்தி தன் வாழ்க்கைத் தரிசனத்தின்வழி விரித்துச் சொல்கிறார். ஐந்து நெடுங்கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சூரியனின் குதிரை
யு.ஆர்.அனந்தமூர்த்தி
(தமிழில்: கே.நல்லதம்பி)
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
விலை: ரூ.140
அரங்கு எண்: 659
வாசிப்புக்கு முகம் காட்டுவோம்! | ஆஹா! – வாசிப்பை நேசிப்போம் என்கிற வாசிப்புக்கான முகநூல் குழுவினர் புத்தகக் காட்சியில் வாசிப்பை வளர்க்கும் விதமாக ஒரு செல்பி அட்டையைப் பிரச்சாரமாக எடுத்துச்செல்கின்றனர்.
வெளி அரங்கில் இன்று… புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (08.01.25) மாலை 6 மணி அளவில் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்கிற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்கிற தலைப்பில் கவிதா ஜவஹர் உரையாற்றுகிறார். நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர் பு.மோ.சிவக்குமார் வரவேற்புரையும் பபாசி செயற்குழு உறுப்பினர் சிவ.செந்தில்நாதன் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.