menu Home
Hindu Literature

எளிய மொழியில் அறிவியல் | நம் வெளியீடு | Vidai Thedum Ariviyal Book review in tamil

Bhakti Teacher | June 10, 2025


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி “அறிவியலை மிக எளிய மொழியில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் நன்மாறன் திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார். இந்நூலைப் படித்தவுடன் மாணவர்களின் அறிவியல் தேடல் அதிகமாகும் என்பது உறுதி. மாணவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும் இது ஆசிரியர்களும்,பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல்” என இந்நூலைப் பாராட்டுகிறார்.

காந்தி உங்கள் உறவினர், பூமிக்கு நீர் எங்கிருந்து வந்தது? உயிர்களைக் கட்டுப்படுத்துகிறதா நிலா? டைனசோர்களை உயிருடன் கொண்டு வர முடியுமா? தாவரங்கள் பேசிக்கொள்ளுமா? நாம் ஏன் கனவு காண்கிறோம்? போன்ற 25 சுவாரசியமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.

விடை தேடும் அறிவியல்

நன்மாறன் திருநாவுக்கரசு

இந்து தமிழ் திசை பதிப்பகம்

விலை: ரூ.120

தொடர்புக்கு: 74012 96562

இந்து தமிழ் திசை அரங்கு எண்: 55 & 56

அதிகாரியின் அனுபவங்கள் | நயம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிகளில் முக்கியமானவர் துக்கையாண்டி. இவரது அனுபவப் பகிர்வுகளே இந்தத் தொகுப்பு. அவரது பணி அனுபவம் பலதரப்பட்டதாக அமைந்திருக்கின்றன. விசாரணை அதிகாரியாக வழக்குகளை அவர் எதிர்கொண்ட விதம் ஒரு படிப்பினையாக வெளிப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவரது அனுபவத்தின் வழி தமிழ்நாட்டின் வரலாறும் துலக்கமாகிறது. பிரபல வழக்கான மருதையாற்று ரயில் பாலம் குண்டுவெடிப்பு குறித்து அகிரா குரோசாவாவின் ‘ரஷோமான்’ படத்தைப் போல் பல பார்வைகள் உள்ளன.

ஒரு காவல் துறை அதிகாரியாக இவரது அனுபவம் அந்தச் சம்பவத்தை விளங்கிக்கொள்ள உதவுகிறது. அதுபோல் இலங்கைத் தமிழ் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய சம்பவங்களில் இவருக்கு இருந்த பங்கு முக்கியமானதாகப்படுகிறது. ராஜிவ் காந்தி காலக்கட்டத்தில் டெல்லியில் போராளிக் குழுக்களுடன் நடந்த பேச்சுவார்த்தைச் சம்பவங்கள் இதில் யதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளன. அனுபவங்களாக மட்டுமல்லாமல், பல விஷயங்களில் அவரது அபிப்ராயங்களையும் பகிர்ந்துள்ளது வாசக நுழைவுக்கான சாத்தியத்தை ஏற்படுத்துகிறது.

ஊர்க்காவலன்

துக்கையாண்டி ஐபிஎஸ்

மின்னம்பலம்

விலை: ரூ.400

அரங்கு எண்: 67

இலக்கியத்தின் இன்னொரு முகம் | செம்மை: சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று நொண்டி நாடகம். இந்த நூலில் கால சுப்ரமணியம், நொண்டி நாடகம் குறித்த தெளிவான ஆய்வுரையை எழுதியிருக்கிறார். அதன் வழி அதன் தன்மை துலக்கமாகிறது. சீதக்காதி நொண்டி நாடகமும், திருச்செந்தூர் நொண்டி நாடகமும் அடிக்குறிப்புகள், பொருளடைவுகளுடன் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. நொண்டி நாடகங்களுக்கான கதைச் சுருக்கம், இதுவரை வெளியான நொண்டி நாடகங்கள் பற்றிய தகவல்கள் என இந்த நூல், அந்த இலக்கியம் குறித்த ஒரு சித்திரத்தை அளிக்கிறது.

நொண்டி நாடகம்

செம்பதிப்பு:

கால சுப்ரமணியம்

பரிசல் புத்தக நிலையம்

விலை: ரூ.220

அரங்கு எண்: 180, 181

கணிதம் கற்க வழிமுறைகள் | சிறப்பு: கணிதம் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக இருக்கிறது. கணிதமின்றி எதுவும் இல்லை எனலாம். விண்வெளி ஆராய்ச்சியில் இருந்து மளிகைப் பொருள்கள் வாங்குவது வரை கணிதம் இருக்கிறது. ஆனால், கணிதத்தை நாம் எப்படிக் கற்கிறோம், கற்பிக்கிறோம் என்பது கேள்விக்குரிய ஒன்று. கணிதம் கற்பிப்பதில் உள்ள இடர்கள், அதை எப்படி அணுகுவது, மாணவர்களுக்கு விளக்குவது என்பதை இந்த நூலில் விழியன் எளிமையாக விளக்கியுள்ளார்.

கணிதக் கற்றலும் கற்பித்தலும்

விழியன்

பாரதி புத்தகாலயம்

விலை: ரூ.125

அரங்கு எண்: F-23

வெளி அரங்கில் இன்று… புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (10.01.25) மாலை 6 மணி அளவில் ‘பண்பாட்டுப் பயணம்’ என்கிற தலைப்பில் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் உரையாற்ற உள்ளார். இதைத் தொடர்ந்து, ‘புத்தகப் போராளிகள்’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் ஆயிஷா நடராசன் உரையாற்ற உள்ளார். பபாசி இணைச் செயலாளர் மு.துரைமாணிக்கம் வரவேற்புரையும் பபாசி செயற்குழு உறுப்பினர் எஸ்.ராம்குமார் நன்றியுரையும் வழங்க உள்ளனர்.