ஊட்டச்சத்துச் சுரங்கம் | நம் வெளியீடு | keeraigal desam book review in tamil

நம் நாட்டிலேயே எளிதாகக் கிடைத்தாலும் சத்தான உணவு வகைகளில் நாம் பெரிதும் மறந்துவிட்டது கீரைகளைத்தான். கீரைகள் நிச்சயமாக விலை கூடியவை அல்ல. மிக எளிதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கக்கூடியவை. அதிலும் நம் நாட்டில் மிகச் சாதாரணமாக நமது தோட்டங்களிலும் புழக்கடைப் பகுதிகளிலும் எளிதாக விளையும் குப்பைமேனிக் கீரை, பருப்புக் கீரை எனப் பல கீரை வகைகளைப் பார்க்கலாம். அந்தக் காலத்தில் வீட்டிலிருக்கும் சிறிய இடத்திலும் பல கீரை வகைகள் வளர்ந்திருக்கும். எளிதாகவும் சுவையாகவும் சமைக்கக்கூடிய கீரை வகைகள் நம்மிடையே உண்டு. இவை அளிக்கும் சத்துக்களோ ஏராளம். அந்தக் கீரைகளின் மகத்துவத்தைக் கூறும் நூல் இது.
கீரைகள் தேசம்
டாக்டர் வி.விக்ரம்குமார்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 74012 96562
இந்து தமிழ் திசை அரங்கு எண்: 55 & 56
கற்பனை வளமிக்க கதைகள் | செம்மை: தமிழில் அறிவியல் புனைகதைகள் எழுதுவதில் தற்போது முன்னணியில் இருப்பவர் ஆயிஷா நடராசன். இவரது இரண்டாவது அறிவியல் புனைகதைகளின் தொகுப்பாக ‘அசிமவ்வின் தோழர்கள்’ நூல் வந்துள்ளது. பிரபஞ்சத்தில் நமது பால்வெளி மண்டலத்துக்கு அருகேயுள்ள கேலக்ஸியான ஆன்ரிமோடா கேலக்ஸியிலிருந்து நமது சூரியக் குடும்பம், பூமியில் நடைபெறும் நிகழ்வுகளை உற்றுநோக்கிக் கதை சொல்வது போன்ற கற்பனையில், இந்த அறிவியல் புனைகதைகள் எழுதப்பட்டுள்ளன. அறிவியல் கண்ணோட்டத்தை மேம்படுத்தக்கூடிய, வருங்கால அறிவியல் தொழில்நுட்பப் புரட்சிகளுக்கான கற்பனைகளை வளர்க்கவல்ல புனைவுகள் எல்லாக் கதைகளிலும் கொட்டிக் கிடக்கின்றன.
அசிமவ்வின் தோழர்கள்
ஆயிஷா
இரா.நடராசன்
புக்ஸ் ஃபார் சில்ரன்
அரங்கு எண்: 5, 6
ஆய்வுப் பின்னணியில் ஓவியங்கள் | சிறப்பு: சித்தன்னவாசல் ஓவியங்கள் தமிழ்நாட்டின் பெருமை என்று சொல்கிறோம். உண்மையில், அந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகளைக் கடக்க முடியாமல் பெருமளவு மங்கிவிட்டன. அதன் அருமை முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாமல் இயற்கையாகவும், மனிதத் தலையீட்டாலும் சிதைக்கப்பட்டுவிட்டன. இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் 9ஆம் நூற்றாண்டு தொடங்கி, கடந்த நூற்றாண்டு வரை சமண ஓவியக் கலையை முழுமையான வண்ணப்படங்களுடன் ஆய்வுப் பின்னணியில் பதிவுசெய்து தந்திருக்கிறது பேராசிரியர் சா.பாலுசாமியின் ‘தமிழ்நாட்டுச் சமண ஓவியங்கள்’ நூல். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.
சித்தன்னவாசல் மட்டுமின்றி, மதுரை ஆனைமலை, ஆர்மாமலை, திருமலை, திருப்பருத்திக்குன்றம், கரந்தை, மேல்சித்தாமூர், வீடூர் ஆகிய இடங்களில் உள்ள ஓவியங்களும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியக் கலை ஆவணமான இந்த நூலை, அவருடைய முந்தைய நூல்களைப் போலவே இலக்கியத்துடன் ஒப்பிட்டுக் கலைக் கோட்பாடு அடிப்படையில் எழுதியுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்ட ‘திருப்புடைமருதூர் ஓவியங்கள்’ நூலைத் தொடர்ந்து, இந்த நூலும் ஓவியக் கலை நூல்கள் வரிசையில் மற்றொரு மணிமகுடம்.
தமிழ்நாட்டுச் சமண ஓவியங்கள்
சா.பாலுசாமி
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
விலை: ரூ.3,500
அரங்கு எண்: 161, 162
உளத் தேடல் பயணம் | நயம்: பயண நூல்கள் பல. இந்த நூல் எண்ணங்கள் வழியாக இறந்த காலத்தைத் துழாவிப் பயணிக்கிறது. நூலாசிரியர் தன் தனி அனுபவங்கள் வழியாக வாசகர்களிடம் ஒரு நல்ல உரையாடலை உருவாக்குகிறார். மதுரை மீனாட்சி குறித்த விவரிப்பு ஒரு சித்திரமாக மனத்துக்குள் விரிகிறது. ஒரு பனை மரமும் கருவேல மரமும் பேசிக்கொள்ளும் உரையாடல் குழந்தைமை மிகுந்தும் அர்த்தச் செறிவு கொண்டதாகவும் வெளிப்பட்டுள்ளது. எளிய மொழியும் உள்ளார்ந்த ஆழமும் இந்த நூலைக் கவனம் மிக்கதாக்குகின்றன.
பனி மலர்கள்
லோகநாதன்
சர்வோதய
இலக்கியப் பண்ணை
விலை: ரூ.150
அரங்கு எண்: 77, 78
வெளி அரங்கில் இன்று… புத்தகக் காட்சி வெளி அரங்கில் இன்று (09.01.25) மாலை 6 மணி அளவில் ‘பாட்டினைப் போல் ஆச்சரியம்’ என்கிற தலைப்பில் ம.ராசேந்திரன் உரையாற்றவுள்ளார். இதைத் தொடர்ந்து ‘புத்தகம் என்னும் புதையல்’ என்கிற தலைப்பில் பாரதி பாஸ்கர் உரையாற்றுகிறார். பபாசி துணைத் தலைவர் வி.புருஷோத்தமன் வரவேற்புரையும் நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர் வி.யுவராஜ் நன்றியுரையும் வழங்கவுள்ளனர்.