கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வர் கோயில் தேரோட்டம்: அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து இழுத்தனர் | Kandadevi Sornamoortheeswarar Temple Therotam All communities pulled the chariot

சிவகங்கை: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வர் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. தேரை அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து இழுத்தனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். தேர் வடம் பிடித்து இழுப்பதில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த 1998-ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் கடந்த 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம், தேர் பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இந்த ஆண்டு சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆனித் திருவிழா ஜூன் 30-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை சுவாமி, அம்மன் தேரில் எழுந்தருளினர். காலை 6.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அனைத்து சமூகத்தினரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காலை 7.40 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
வெளிநபர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு, டோக்கன் வைத்திருந்தோர் மட்டுமே வடம் பிடித்து இழுக்க அனுமதிக்கப்பட்டனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேரோட்டத்தையொட்டி, மதுரை மாநகராட்சி காவல் ஆணையர் லோகாதன், ராமநாதபுரம் சரக டிஐஜி மூர்த்தி, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) சந்தீஷ் மற்றும் 4 எஸ்.பிகள் தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பட்டதோடு, 4 தேரோடும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர் ஓடுவதை கண்காணிக்க 17 நிர்வாக நடுவர்கள் நியமிக்கப்பட்டனர். கண்டதேவியை சுற்றியுள்ள 24 கிராமங்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையில் கண்காணிக்கப்பட்டன.