தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி தொடக்கம் | Ashada Navratri begins at Thanjavur Big Temple

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, வராஹி அம்மன் இனிப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலின் தெற்கு புறத்தில் மிகவும் பழமையான வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வோர் ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டு விழாவின் முதல் நாளான நேற்று காலை மகா கணபதி ஹோமம், அபிஷேகம், வராஹி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நேற்று மாலை இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இன்று (ஜூன் 26) மஞ்சள் அலங்காரம், நாளை குங்குமம், 28-ம் தேதி சந்தனம், 29-ம் தேதி தேங்காய்ப்பூ, 30-ம் தேதி மாதுளை அலங்காரம், பஞ்சமி அபிஷேகம், ஜூலை 1-ம் தேதி நவதானியம், 2-ம் தேதி வெண்ணெய், 3-ம் தேதி கனி வகை, 4-ம் தேதி காய்கறி, 5-ம் தேதி புஷ்ப அலங்காரம் மற்றும் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழா நாட்களில் காலை 8 முதல் 11 மணி வரை சிறப்பு வராஹி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், மாலை 6 மணி முதல் சிறப்பு அலங்காரம், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.