menu Home
Spirituality

ஆர்எஸ்எஸ் – கோவை பேரூர் ஆதீனம் நூற்றாண்டு விழா: சிவவேள்வி பூஜையில் பங்கேற்கிறார் மோகன் பாகவத் | Mohan Bhagwat will participate Traditional Shiva Velvi Pooja held on coimbatore

Bhakti Teacher | June 21, 2025


கோவை: ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பேரூர் ஆதீனம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 23-ம் தேதி பாரம்பரிய சிவவேள்வி பூஜை நடக்கிறது. இவ்விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார்.

கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கோவையில் இன்று (ஜூன் 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேரூரில் பேரூர் ஆதீனத்தைத் கி.பி.11-ம் நூற்றாண்டில் அருட்குரு சாந்தலிங்கப்பெருமான் தோற்றுவித்தார். அதன் பின்னர், அவரின் அருள்வழியில் 24-ஆம் குருமகாசந்நிதானமாக சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திகழ்ந்தார். அவர் சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகப் போற்றினார்.

அவரின் வழியில் கல்வி, சமுதாயம், மருத்துவம், பாரம்பரியம், பண்பாடு ஆகிய பணிகளை ஆதீனம் தற்போது சிறப்பான முறையில் செய்து வருகிறது. பேரூர் ஆதீனத்தின் 24–ம் குருமகாசந்நிதானங்கள் உலகெங்கும் விரிந்து மிகச் சிறப்பாக செயலாற்றி வரும் தமிழ் நெறி வழிபாட்டின் மறுமலர்ச்சியை உருவாக்கியவர்கள்.

குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய இடங்களுக்குச் சென்று அவர்களின் இல்லங்களில் திருவிளக்கு வழிபாடுகளை நடத்தியது, பல்வேறு வகையான மக்களுக்கும் தீக்சைகளை வழங்கி அவர்களை ஆதீன கர்த்தர்களாக ஆக்கியது என அடிகளார் பல்வேறு பணிகளை தன் வாழ்நாள் முழுவதும் செய்தவர்கள்.

இவ்வாறு தன் வாழ்நாள் முழுவதும் சமய சமுதாய மறுமலர்ச்சிக்காக அயராது உழைத்த பேரூர் ஆதீனம் ராமசாமி அடிகளாருக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இந்த ஆண்டு நூறாவது ஆண்டாக அமைந்துள்ளது. அதை ஒட்டி இருவருக்குமான நூற்றாண்டு விழாவை, பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் 23-ம் தேதி (திங்கள்கிழமை) நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்வில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கிறார்.

அன்று காலை 6 மணி முதல் 7:15 மணி வரை வேள்விகள் நடத்தப்படும். வேள்வியின் நிறைவாக மோகன் பாகவத் சிவலிங்கத்திற்கு அபிஷேக வழிபாடுகளை செய்ய உள்ளார்கள். அதைத்தொடர்ந்து 11 மணி வரை நடைபெறம் பொது நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார். இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.