menu Home
Hindu Literature

 எழுத்தாளர்களுக்கு ‘சுந்தர மரியாதை’ | photo exhibition in chennai

Bhakti Teacher | June 11, 2025


Last Updated : 04 Jan, 2025 06:25 PM

Published : 04 Jan 2025 06:25 PM
Last Updated : 04 Jan 2025 06:25 PM

நடிகர் பொன்வண்ணனுடன் ஓவியர் சுந்தரன்

தீவிர இலக்கிய வாசகர்களுக்கு சுந்தரன் முருகேசன் (எம். சுந்தரன்) குறித்துத் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. கறுப்பு வெள்ளைச் சித்திரமாக அவரால் வரையப்படுவது இலக்கியவாதிகளுக்கு ஒரு மரியாதை என்று ஆகிவிட்டது. ஈரோடு பகுதியைச் சேர்ந்தவரான சுந்தரன், அங்கிருந்தபடியே ஓவியப்பணிகளில் ஈடுபட்டுவருகிறார். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவரும்கூட.

நீர்வண்ண ஓவியங்கள் (water colour paintings) வரைவது இவரது கலைச்செயல்பாடாகவும் தொழிலாகவும் இருப்பினும், இலக்கிய ஈடுபாடு எழுத்தாளுமைகளை வரைவதற்கு வழிநடத்தியது. திருவள்ளுவர் முதல் இன்றைய இளந்தலைமுறை எழுத்தாளர் வரைக்கும் இவரது ஓவியங்களில் தோன்றாத இலக்கிய முகமே இல்லை எனலாம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களோடு இருக்கும் நட்பு மட்டுமல்லாமல், அவர்களது படைப்புச் சிந்தனை மீது இவர் கொண்டிருக்கும் மதிப்பும் இச்செயல்பாட்டின் பின்னணியில் உள்ளது.

சுந்தரன் கைவண்ணத்தில் பாரதியார்

சமூக அக்கறையையும் தூரிகையோடு சேர்த்துப் பற்றியிருப்பது சுந்தரனின் இயல்பு. வள்ளலார், அம்பேத்கர், பெரியார் போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளை இவர் வரைந்த ஓவியங்கள் சமூகத்துக்கு ஒரு கொடை. பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு கேரளத்தில் உள்ள வைக்கத்தில் பெரியார் தங்கியிருந்த வீட்டைத் தமிழக அரசு புதுப்பித்து நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. சுந்தரன் வரைந்த பெரியார் ஓவியம் அந்த இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

சென்னை எழும்பூர் அருகே உள்ள லலித் கலா அகாடமி காட்சிக்கூடத்தில் ‘கனவுவெளிகளும் யதார்த்தங்களும் (Dreamscapes and Realities’ என்கிற தலைப்பில் ஓவியக் கண்காட்சி தற்போது நடைபெற்றுவருகிறது. டி. ஜோமலி (EJOUMALE) , ஹேமலதா சேனாதிபதி, எஸ். எம். சி. ராஜேஷ், ஜி. மணிமாறன், வி. வசந்தன் வீரப்பன் ஆகியோர் வரைந்த ஓவியங்களோடு, சுந்தரனின் படைப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன. குறியீட்டுப் பாணியில் வரையப்பட்டவை, மரபின் கூறுகளைக் கொண்டவை, பொதுவெளிகளைச் சித்திரிக்கும் நீர்வண்ணப் படைப்புகள் என ஆறு கலைஞர்களுடைய பாணிகளின் சங்கமம் இது.

சுந்தரனின் ஆளுமைச்சித்திரங்கள் உள்பட அவரது எல்லா ஓவியங்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காட்சி நடத்த வேண்டும் என எழுத்தாளரும் கலை விமர்சகருமான இந்திரன் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். அது விரைவில் நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை இக்கண்காட்சி ஏற்படுத்தியது.

ஓவியக் கண்காட்சி நடைபெறும் இடம்: லலித் கலா அகாடமி, கிரீம்ஸ் சாலை, சென்னை | நடக்கும் நாள்: ஜனவரி 1 – 7 வரைக்கும்; நேரம்: காலை 11.30 – மாலை 7 மணி வரை.

FOLLOW US