ஜென் காமிக்ஸ் கதைகள்! | நம் வெளியீடு | zen gnanakathaigal book review in tamil

சிறார் கதைகளிலிருந்து மாறுபட்டவை ஜென் கதைகள். வழக்கமான கதைகளில் பெரும்பாலும் நீதியைக் குழந்தைகள் தேடவேண்டியிருக்கும். சில சமயங்களில் கதையைச் சொல்பவர்களே ‘இதுதான் நீதி’ என்று சொல்லவேண்டியிருக்கும். நீதியே கதையாக மலர்வதுதான் ஜென். எழுத்தாளர், ஓவியர் முத்துவின் 28 கதையிலும் இந்த நுட்பம் வெளிப்பட்டிருப்பதுதான் சிறப்பு.
சிறார்களைக் கவரும் விதத்தில் எளிமையான கோடுகளில் ஓவியர் முத்து, அழகான ஓவியங்களை இந்தக் காமிக்ஸ்காக வரைந்துள்ளார். இந்த ஜென் காமிக்ஸ் கதைகள் அற்புதமான கருத்துகளைச் சொல்லும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. என்றாலும்கூட பெற்றோர்கள்/பெரியவர்கள், அதைப் படித்துச் சிறார்களிடம் ஓர் உரையாடலை நிகழ்த்த வேண்டும். அம்மாதிரியான பெரியவர்- சிறார் இடையேயான ஓர் உரையாடலையும் இந்தக் கதைகள் பரிந்துரைக்கின்றன.
முன்னணி ஓவியர்களில் ஒருவரான முத்து, கடந்த 28 ஆண்டுகளாக ‘கோகுலம்’, ‘சந்தமாமா’, ‘சுட்டி விகடன்’ போன்ற சிறார் பத்திரிகைகளில் எழுதியும் வரைந்தும் வந்திருக்கிறார். தற்போது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கார்ட்டூனிஸ்டாகப் பணி புரிந்து வருகிறார். அவர் எழுதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் இணைப்பிதழான ‘வெற்றிக்கொடி’யில் வெளிவந்து கவனம்பெற்ற ஜென் கதைகளின் தொகுப்பு நூல் இது.
ஜென் ஞானக்கதைகள்
எழுத்து, ஓவியம்: முத்து
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை:ரூ.180
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
தூரிகை விருதுகள் | திண்ணை: பாடலாசிரியர் கபிலன் தன்னுடைய மகள் தூரிகை பெயரில் சிறந்த கவிதைத் தொகுப்புகளுக்கான விருதை இந்தாண்டு முதல் வழங்கவுள்ளார். இந்தாண்டுக்கான விருதுக்கு பிரியதர்ஷினியின் ‘தோடயம்’, கார்த்தியின் ‘மனுஷபுராணம்’ ஆகிய இரு தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரு தொகுப்புகளுக்கும் தலா ரூ.25,000 பரிசுத் தொகையும் நினைவுப் பரிசும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரளயனுக்கு விருது: தமிழ் நாடக ஆளுமையான பிரளயனுக்கு கேரளத்தைச் சேர்ந்த ரிமெம்பரன்ஸ் தியேட்டர் குரூப் (Remembrance Theatre Group) நாடக அமைப்பு வழங்கும் பாதல் சர்க்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்திய அளவிலான நாடக ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது. பாதல் சர்க்காரின் தாக்கம் பெற்றவர் பிரளயன். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.