திண்ணை: கரிசல் குயில் கிருஷ்ணசாமி மறைவு | karisal kuyil krishnasamy passed away

வாண்டுமாமா நூற்றாண்டுக் கூட்டம்: சிறார் எழுத்தாளர் வாண்டுமாமாவின் நூற்றாண்டை ஒட்டி அவருக்கு ஒருநாள் கருத்தரங்கம் திங்கள்கிழமை (14.04.25) சென்னை கே.கே. நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி அளவில் தொடங்கி இரவு 9 மணி வரை பல அமர்வுகளில் வாண்டுமாமா எழுத்துகள் விவாதிக்கப்படவுள்ளன. இயக்குநர்கள் வஸந்த், சுசீந்திரன், வசந்த பாலன், ராஜூ முருகன், சிங்கம்புலி, ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, ஷ்யாம், ராமு, அரஸ், எழுத்தாளர் கல்யாணராமன், கிங் விஷ்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், யாவரும் பதிப்பகம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன.
அழகிய பெரியவன் கூட்டம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை ஒருங்கிணைக்கும் எழுத்தாளர் அழகிய பெரியவனின் ‘படிகப் பாடல்’ சிறுகதைத் தொகுப்பு விமர்சனக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகப் பவளவிழாக் கலையரங்கத்தில் வியாழன் (17.04.25) அன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. பேராசிரியர்கள் ஆ.ஏகாம்பரம், ஜெ.சுடர்விழி, இயக்குநர் தமிழ், சாம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்கள்.
கரிசல் குயில் கிருஷ்ணசாமி மறைவு: கரிசல் குயில் கிருஷ்ணசாமி, தமிழகத்தின் முற்போக்கு மேடைகளில் பாடிய பாடகர். விருதுநகர் மாவட்டம் நரிக்குளத்தில் பிறந்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தில் செயல்பட்டவர். ‘வேண்டான்டா வெள்ளை மாத்திரை’, ‘கட்டபொம்மனும் சேரனும் சோழனும் முட்டி மோதுற ரோடு’, ‘கலெக்டர்வாராரு காரு ஏறி தாரு ரோட்டுல’ போன்ற பாடல்கள் வழி சமூகப் பிரச்சினைகளைப் பாடியவர்.