menu Home
Hindu Literature

ஒரு தமிழ் அனிமேஷன் கதை | நம் வெளியீடு | Tamil animation story book review

Bhakti Teacher | May 6, 2025


இந்தியச் சிறார்களின் மத்தியில் பிரபலமான மேற்குலக அனிமேஷன் கதாபாத்திரங்களின் பட்டியல் நீளமானது. ஆனால், இந்திய, தமிழ் தன்மையுடன் நமது கலாச்சாரத்தில் முகிழ்த்த சிறார் கதாபாத்திரங்கள் அரிதினும் அரிதாகவே புகழ்பெற்றிருக்கின்றன.

அப்படிப் புகழ்பெற்றவற்றில் சோட்டா பீமின் சாகசங்கள் மிகையென்றோ, மோட்லு பட்லு உடல்கேலி என்கிற மலிவான நகைச்சுவை உத்திக்குள் வார்க்கப்பட்டவர்கள் என்றோ குழந்தைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால், எழுத்தாளர் மமதி சாரி அறிமுகம் செய்து வரும் சிறார் படக்கதை கதாபாத்திரங்கள் தும்பைப் பூக்களுக்கு நிகரானவை.

மாசு மருவற்றவை. எவ்வித மேற்கத்திய தாக்கமும் இல்லாத அசலான தமிழ் மனத்தின் சிறகு விரித்த அவருடைய கற்பனை, சிறார் உலகை உச்சி முகரும் நேசத்தால் நிறைந்து விரிவது.

அவருடைய ‘விண்மீன் திருடும் அவிரா’, தமிழர்களுக்கேயுரிய அற வாழ்வைச் சாகசக் கதையின் வழியாக இளையோர் மனதில் பதியமிடும் சிறார் படக்கதை புத்தகம். அதற்கு வாசகர்கள் மகத்தான ஆதரவு கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது மமதி சாரி, ‘கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை’ என்கிற தன்னுடைய அடுத்த படைப்புடன் வந்திருக்கிறார். என்கோ என்கிற சிறுவனையும், பறல் என்கிற ஆட்டுக்குட்டியையும் முதன்மைக் கதாபாத்திரங்களாகப் படைத்திருக்கிறார்.

இம்மி என்கிற கரப்பான் பூச்சியைத் துணைக் கதாபாத்திரம் ஆக்கியிருக்கிறார். கரப்பான் பூச்சி என்கிற ஒரு விலக்கப்பட்ட உயிரினத்தை, குறிப்பாக அதைக் கண்டு அலறி நடுங்கும் குழந்தைகளின் உலகில் அதனை ஓர் இனிய விருந்தாளி ஆக்கிவிடுகிறார். உயிர்கொல்லும் துப்பாக்கியின் வாயிலிருந்து நெருப்புக்குப் பதிலாக மானுட அன்பெனும் நீர் பெருகி வழியட்டும் என்று சிறார்களின் மனதில் வன்முறைக்கு அணைபோட்டு வைக்கிறார்.

தம்மிடம் இருப்பதை நண்பர்களுடன் பகிர்தல் என்கிற பண்பு எத்தனை சிறந்தது என்று போகிற போக்கில் பிஞ்சுகளின் மனதில் பதிய வைக்கிறார். இக்கதைப் புத்தகம் ஒருபடி மேலே சென்று, கதாபாத்திரங்கள் பயன்படுத்திய கப்பலை எப்படிச் செய்வது எனப் படம் வரைந்து பாகம் குறித்து, செய்முறை சொல்லித் தந்திருப்பது, சிறார் கதை சொல்லலில் அடுத்த உயரம். இது உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் நல்ல மனப் பயிற்சியாக அமையும் என்று உறுதியாகக் கூற முடியும்.

கடற்கொள்ளையருக்கும் கறுமொறு தேவை

மமதி சாரி

விலை: ரூ.180

இந்து தமிழ் திசை பதிப்பகம்

ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications

தொடர்புக்கு : 7401296562

வெற்றிக் கதைகள்: பல்வேறு துறைகளில் வெற்றிபெற்ற பெண்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அழகுக்கலை, சிலை வடிவமைப்பு, பங்குச்சந்தை, இசை, உணவு, சிறார் நலம் எனப் பல துறைகளில் திறம்படச் செயலாற்றிவரும் பெண்களை இந்நூலின் ஆசிரியர் சந்தித்து நேர்காணல் செய்திருக்கிறார். உதாரணமாக வர்னியா, விமானப் பணிப்பெண் ஆவதற்காக முயன்றுள்ளார்.

அதற்காகத் தனியாகப் படிக்கவும் செய்துள்ளார். ஆனால், அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் தளர்ந்துவிடாமல் அவர் தொலைக்காட்சிகளில், விளம்பரங்களில் பணியாற்றித் தனது வாழ்க்கையைத் திறம்பட வாழ்கிறார். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இசைச் சகோதரிகள் இருவர் பற்றிய பதிவும் சுவாரசியமானதாக இருக்கிறது. – விஜித்ரன்

தேவதைகளின் சங்கமம்

வாசுகி லட்சுமணன்

பொழில் பதிப்பகம்

விலை: ரூ.250, தொடர்புக்கு: 78069234512

சிறார் நூல்கள் புத்தகக் காட்சி | திண்ணை: சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டமும் அரசு கிளை நூலகமும் இணைந்து சிறார் நூல்களுக்கான புத்தகக் காட்சியை இன்றும் நாளையும் (03.05.25, 04.05.25) காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை சத்தியமங்கலம் அரசு கிளை நூலகத்தில் நடத்த உள்ளது. தொடர்புக்கு: 9003790297

புதுமைப்பித்தன் களஞ்சியம் முன்வெளியீட்டுத் திட்டம்: புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு அவர் குறித்து வெளிவந்த இலக்கிய மதிப்பீடுகள், விமர்சனங்கள், நினைவலைகள் ஆகியவற்றின் மொத்த தொகுப்பான இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் முன் வெளியீட்டுத் திட்டத்தில் கொண்டுவருகிறது. தொகுப்பாசிரியர், ஆ.இரா.வேங்கடாசலபதி. ரூ.1350 விலையுள்ள நூல் இத்திட்டத்தில் ரூ.875க்குக் கிடைக்கும். திட்ட முன்பதிவுக்கான கடைசித் தேதி: ஜூன் 5. தொடர்புக்கு: 9677778863, 8610098488